OPS: அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் சகோதரர் நீக்கம்

ஓபிஎஸ் சகோதரர்

OPS: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சட்ட மன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவிகிதம் பின்னோக்கி சென்றுள்ளது.

இதனால் கடும் அதிருப்தியில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர். இந்த தொடர் தோல்வி அதிமுகவிற்கு சரியான தலைமை இல்லையென்றே அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. இந்தநிலையில் தென் மாவட்டங்களில் அதிமுக எப்பொழுதும் பெற்று வந்த வாக்குகளும் தற்போது பெறமுடியாமல் திணறி வருகிறது. இதற்கு சசிகலாவை புறக்கணித்ததால் அவருடைய சமுதாய வாக்குகள் கிடைக்கவில்லையென்று கூறப்படுகிறது.

இதனையடுத்து தான், தேனி மாவட்ட அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக- அமமுக இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கினர். இதனால் தமிழகம் முழுவதும் அதிமுகவில் சசிகலா மீண்டும் சேர்ப்பது தொடர்பாக குரல் எழுந்தது.

இதையும் படிங்க: Jio World centre mumbai : ரிலையன்ஸ் ஜியோ வேர்ல்ட் சென்டர் மும்பை

இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனி தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சசிகலா தென் மாவட்டங்களில் சுற்றுபயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து வருகிறார். திருச்செந்தூர் வந்த சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நேரில் சந்தித்தார்.

அப்போது தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேஷன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சசிகலாவை சந்தித்து பேசினர். இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏற்னவே தேனி மாவட்ட அதிமுக சார்பாக தீர்மானம் நினைவேற்றப்பட்ட நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் சசிகலாவை சந்தித்தது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஓ.ராஜாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தலைமை உள்ளது.

சிறையிலிருந்து வெளியான சசிகலா அதிமுக தொண்டர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மீண்டும் கட்சி வலுப்பெற நடவடிக்கை எடுப்பேன் என்று அதிமுக நிர்வாகிகளிடம் உறுதியளித்திருந்தார் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சசிகலாவிடம் பேசிய அனைவரையும் கட்சித்தலைமை நீக்கி உத்தரவிட்டது. இதே போல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் கூடவே இருந்த சிறுபான்மை பிரிவு தலைவர் பஷீர் அகமது, கர்நாடகா புகழேந்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஓ பன்னீர்செல்வம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தான் இருந்து வந்தார்.முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் வலதுகரமாக இருந்த ஷெரிப் சசிகலாவை கடந்த வாரம் சந்தித்து பேசினார்.

அவரையும் கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் ஓ.ராஜாவை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துடன் தொலைபேசியில் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓ.ராஜாவை நீக்குவதற்கான அறிவிப்பில் ஓபிஎஸ் கையெழுத்திடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி ஓ.பன்னீர் செல்வம், ஓ.ராஜாவை நீக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டால் அதிமுகவில் சசிகலாவின் ரீ-என்டிரி கேள்விகுறியாக மாறியுள்ளதாகவே எடுத்துக்கொள்ளலாம்

இதையும் படிங்க: Cabinet Meeting: இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை