Omicron: தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினசரி கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனா பாதிப்பு

Omicron: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 7 கோடியே 74 லட்டத்து 53 ஆயிரத்து 917 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 14-வது மெகா தடுப்பூசி முகாம் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது…

தமிழகத்தில் இன்று 14-வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் 45ஆயிரத்து 347 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில், முதல் தவணையாக 6 லட்சத்து 81 ஆயிரத்து 346 பேரும், 2வது தவணையாக 13 லட்சத்து 64 ஆயிரத்து 001 பேரும் செலுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 7 கோடியே 74 லட்டத்து 53 ஆயிரத்து 917 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில், முதல் தவணையாக 83.48 சதவீதம் பேரும் 2வது தவணையாக 51.31 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் ஹைரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்களை தொடர்ந்து கவனித்து வருகிறோம். இதுவரை ஹைரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 10 ஆயிரத்தி 5 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 2207 பேருக்கு பரிசோதனை செய்ததில் சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதில், அனைவருக்கும் டெல்டா வைரஸ் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை.

பொது இடங்களில் கூடுபவர்கள் விதிமுறைகளை கடைபிடிக்க தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. மே 6-க்கு முன்னர் தடுப்பூசி செயல்பாடு நாள்தோறும் 60 ஆயிரம் என்று இருந்த நிலையில், இன்று தினசரி சராசரி தடுப்பூசி என்பது 3 லட்சம் வரை வருகிறது. மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். தடுப்பூசி செலுத்துவதில் விரைவில் தேசிய சராசரியை தமிழகம் எட்டும் என்றவரிடம் விதிமீறல்களை மீறிய நடிகர் கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விதியை மீறி விட்டார் என்றோ விளக்கம் கேட்கப்படும் என்றோ சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கவில்லை கமல்ஹாசன் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

இரண்டு வாரங்கள் கழித்து தான் வீடு திரும்பினார், ஆகையால் நடிகர் கமல்ஹாசன் எவ்வித விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. சுகாதாரத்துறை செயலாளர் அது போன்ற எதையும் விளக்கம் கூறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: IPL 2022 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பிய 3 வீரர்கள்..!