Corona Virus: மாஸ்க் போடலனா இனி அபராதம் கிடையாது

மாஸ்க் போடலனா இனி அபராதம் கிடையாது
மாஸ்க் போடலனா இனி அபராதம் கிடையாது

Corona Virus: முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் விதிக்கப்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். மேலும் தடுப்பூசி கட்டாயமில்லை என்று கூறப்பட்டுள்ளதே தவிர, யாரும் போடக்கூடாது என்று கூறப்படவில்லை என்று விளக்கிய அமைச்சர், பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

முக கவசம் கட்டாயமில்லை:

இதனிடையே பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார். கொரோனா காலக்கட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, காலி பணியிடங்களை நிரப்பும் போது முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறினார். மேலும் செவிலியர்கள் உரிய அனுமதி பெற்று போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்க வேண்டும் என்றார்.முன்னதாக இன்று சென்னை மெரினாவில் 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து , இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்:

ஏற்கனவே தமிழகத்தில் பொது இடங்களுக்கு வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதை உறுதிசெய்யுமாறு வெளியிடப்பட்ட உத்தரவை திரும்ப பெறுவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், நோய்த் தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி, டெல்லி, மகாராஷ்டிராவிற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் இனி மாஸ்க் அணிவது கட்டாயமில்லை. அதே சமயம் மாஸ்க், கை கழுவுதல், சானிடைசர் உபயோகித்தல் உள்ளிட்ட அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிப்பு குறைவு:

தமிழ்நாட்டை பொறுத்தவரை, முதல் தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 75 சதவீதம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 50க்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் கொரோனா காலத்தில், பொது சுகாதார சட்டத்தின்படி தமிழக அரசு விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அரசின் நிலையான வழிகாட்டுதல்களான தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை சுய விருப்பத்தின் அடிப்படையில் பொது மக்கள் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் விதிக்கப்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களில் வருவோர் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் எனும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு – 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு