நிவர் புயலின் தாக்கம்

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே அதி தீவிர புயலாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் மழை நிதானமாக பெய்தாலும் புறநகரில் காற்றும் மழையும் சூறையாடியது.கடலூர், புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் பெருமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

பயிர்கள் சேதமடைந்தன. நள்ளிரவில் கரையை கடக்கத் தொடங்கிய புயல் அதிகாலை முழுமையாக கரையை கடந்தது.புயல் கரையை கடந்தாலும், மழையின் தீவிரம் குறையவில்லை. பல பகுதிகளில் மழை நிற்காமல் பெய்துகொண்டே இருந்தது. புயலினால் பெரியளவில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டாலும், குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் அதிகபட்சமாக 31.4 செமீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 28 செமீ மழையும், கடலூரில் 27.5 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயல் கரையை கடந்தாலும் உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.