Mayor: தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் என 2 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் வெற்றிபெற்ற 458 கவுன்சிலர்கள் கடந்த 2ஆம் தேதி
பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து இன்று 2 மாநகராட்சி மேயர், 2 நகராட்சி தலைவர் மற்றும் 20 பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் நடைபெற்றது.
அதாவது போட்டி இருப்பின் மட்டும் மறைமுகதேர்தல் நடைபெறும் என்றும், போட்டி இல்லாத பட்சத்தில் ஒரு மனதாகக தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தஞ்சை மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சண்.ராமநாதன் நிறுத்தப்பட்டார். துணை மேயர் பதவிக்கு அஞ்சுகம் பூபதி களம் இறக்கப்பட்டார்.
இதற்கிடையே தஞ்சை மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து மொத்தம் 40 இடங்களைப் கைப்பற்றியிருந்தது. எனவே மெஜாரிட்டி இடங்களை பிடித்ததால் தி.மு.க வேட்பாளர்களை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள் என எதிர்பார்க்கபட்டது.
ஆனால் அ.தி.மு.க சார்பில் முன்னாள் துணை மேயராக இருந்த மணிகண்டன் மேயர் வேட்பாளராக போட்டியிட்டார்.
இதையடுத்து தி.மு.க. சார்பில் சண்.ராமநாதனும், அ.தி.மு.க. சார்பில் மணிகண்டனும் மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் வேட்பாளர்கள் உள்பட 51 வார்டு கவுன்சிலர்களில் 50 கவுன்சிலர்கள் ஓட்டு போட்டனர். ஒரு கவுன்சிலர் வரவில்லை. இதனை தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் சண்.ராமநாதனுக்கு 39 வாக்குகளும், மணிகண்டனுக்கு 11 வாக்குகளும் கிடைத்தன.
இதனால் தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக சண்.ராமநாதன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணையருமான சரவணக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி தரம் உயர்த்தபட்ட பிறகு சந்தித்த முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட முதல் மேயர் என்ற பெருமையை சண்.ராமநாதன் பெற்றார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 37 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தலா வார்டு என 42 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி தி.மு.க. கூட்டணியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி 17-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆட்டோ டிரைவர் சரவணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட வேறு கட்சியினர் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற மகுடத்தை சரவணன் சூடினார். அவருக்கு ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று மாலை மாநகராட்சிகளில் துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. தஞ்சை மாநகராட்சி துணை மேயர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் அஞ்சுகம் பூபதி நிறுத்தப்பட்டார்.
இதேபோல் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயராக தி.மு.க. சார்பில் தமிழழகன் போட்டியிட்டார். மெஜாரிட்டி ஆதரவு இருப்பதால் இவர்கள் இருவரும் துணை மேயர்களாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.
Inauguration of Corporation Mayors in Tanjore, Kumbakonam
இதையும் படிங்க: Aavin Product: ஆவின் பொருட்கள் விலை உயர்வு



