ஆட்சியை இழந்தது காங்கிரஸ்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 14 ஆக குறைந்தது. நியமன எம்எல்ஏக்களுடன் சேர்த்து எதிர்க்கட்சிகளின் பலமும் 14 ஆக இருந்ததால், சட்டப்பேரவையில் திங்கள்கிழமைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

அதனையடுத்து, சபாநாயகர் சிவக்கொழுந்துவை ஞாயிறன்று சந்தித்த ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படாததால் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார்.Advertisement

லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்த சிறிது நேரத்தில், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் வெங்கடேசனும் பதவியை ராஜினாமா செய்தார்.

12 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருந்த நிலையில் இன்று நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர் நாராயணசாமி. நம்பிக்கைத் தீர்மானத்தின்மீது 30 நிமிடங்களுக்கும் மேலாக பேசினார் நாராயணசாமி. அதனையடுத்து அவையை விட்டு வெளியேறினார் நாராயணசாமி. அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.