சிக்கன் கிரேவி சாப்பிட தாய், மகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்பன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு கற்பகவல்லி என்ற மனைவியும், சண்முக பாண்டி என்ற 7 வயது மகனும், தர்ஷினி என்ற 7 வயது மகளும் உள்ளனர்.

நேற்று கற்பகவல்லி தனது மகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று சிக்கன் கிரேவி வாங்கி வந்து வீட்டில் இருந்த உணவுடன் வைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது லேசான வயிற்று எரிச்சல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று அவர்கள் ஒரு குளிர்பானத்தை வாங்கி கொடுத்துள்ளனர். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் கற்பகவல்லி மற்றும் தர்ஷினி இருவரும் மூச்சு திணறி வாந்தி எடுத்து விழுந்தனர்.

இதையடுத்து உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கிருந்து இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது சிகிச்சை பலனளிக்காமல் தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அவர்கள் சாப்பிட்ட சிக்கன் கிரேவி மற்றும் குளிர்பானத்தை போலீசார் பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் உயிரிழப்புக்கு காரணம் சாப்பிட்ட சிக்கன் கிரேவியா? அல்லது குளிர்பானமா? என்பது தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.