கோவை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு

தொற்று அதிகரித்து வரும் கோவை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று மாலை 6.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஈரோட்டிற்கு செல்லும் முதல்- அமைச்சர் இரவில் அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

தொடர்ந்து நாளை காலை 10 மணியளவில் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் உள்ள குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு, அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கேட்டறிகிறார்.

2 மாவட்டங்களில் ஆய்வை முடித்து கொண்டு மதியம் 12.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகிறார். முதலில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்கிறார். அப்போது அங்குள்ள மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

அதனை தொடர்ந்து மாலை 4.40 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மு.க.ஸ்டாலின் அங்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்ட கலெக்டர்கள், 4 மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.