அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்

heavy-rain-warning-to-tamil-nadu-by-chennai-meteorological-center
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

இதேபோல், புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி, ராணிப்பேட்டை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.