வேளாண் சட்டங்களை வாபஸ் பெற 27-ந் தேதி நாடுதழுவிய முழு அடைப்பு

வருகிற 27-ந் தேதி நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம் (பாரத் பந்த்) நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்தனர். முதலில், 25-ந் தேதிக்கு திட்டமிடப்பட்டது. பின்னர், 27-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. மாநாட்டையொட்டி, 2 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மாநாட்டுக்கு வந்தவர்களுக்காக 500 உணவு கடைகளும், நடமாடும் கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. ஆயிரம் மருத்துவ குழுக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.

மாநாட்டுக்காக, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பக்கத்து மாவட்டங்களில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அத்துடன், பாதுகாப்புக்காக 5 ஆயிரம் தன்னார்வ தொண்டர்களை விவசாய சங்கங்கள் நியமித்து இருந்தன. மாநாட்டில் பங்கேற்றவர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து பூக்களை தூவ ராஷ்டிரீய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி அனுமதி கோரியிருந்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட கலெக்டர் அபிஷேக் சிங் அனுமதி மறுத்து விட்டார்.

மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யான், பா.ஜனதா எம்.எல்.ஏ. உமேஷ் மாலிக் ஆகியோரின் வீடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாடு, மோடி அரசுக்கும், யோகி ஆதித்யநாத் அரசுக்கும் விவசாயிகளின் பலத்தை உணர்த்தி இருப்பதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளது.