காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குஷ்பு பாஜகவில் இணைந்தார்..!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குஷ்பு, டில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியில் புறக்கணிக்கப்படுவதாகவும், கட்சியின் முக்கிய கூட்டங்களுக்கோ அல்லது நிகழ்ச்சிகளுக்கோ தான் அழைக்கப்படுவதில்லை எனவும் நடிகை குஷ்பு வெளிப்படையாகவே அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் மற்றும் தமிழக எதிர்க்கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டார். அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பின்னர் அதற்கு விளக்கமளித்து பதிவிட்டார்.

அதிலிருந்தே நடிகை குஷ்பு பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்த வண்னம் இருந்தன. ஆனால் குஷ்புவோ அந்த செய்திகள் எல்லாம் வதந்திகள் என்றும், பாஜகவில் இணையவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் இன்று குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகின.

பாஜகவில் குஷ்பு இணைய இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், நேற்றிரவு ட்விட்டர் பக்கத்தில், “பலர் என்னிடம் மாற்றத்தை பார்க்கின்றனர், வயது அதிகமாகும்போது வளர்ச்சியும் அதிகரிக்கும், கற்றுக்கொள்வதும், கற்றுக்கொண்டதை மாற்றுவதும், நமது பார்வைகள், விருப்பு வெறுப்புகள், தோற்றம் என அனைத்தும் மாறுவது இயல்பானதே. எண்ணங்கள் புதிய வடிவங்களை பெறும், அன்பிற்கும், விருப்பத்திற்கும் இடையேயான வித்தியாசம் புரியும், மாற்றம் தவிர்க்க முடியாதது” என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலையில் குஷ்பு, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த நாட்டிற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சேவை செய்ய அளித்த வாய்ப்பிற்காக சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவித்துள்ள குஷ்பு, கடினமான சூழ்நிலைகளிலும் கட்சிக்காக பணியாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கள நிலவரம் தெரியாமல், மக்களின் அங்கீகாரம் இல்லாமல் உயர் பதவிகளிலும், அதிகாரத்திலும் இருப்பவர்களால், கட்சிக்காக உண்மையாக உழைக்கும் என்னை போன்றவர்கள் ஒடுக்கப்பட்டோம் என நடிகை குஷ்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் நீண்ட நாடகள் நன்கு சிந்தனை செய்த பிறகே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று பிற்பகலில் டெல்லியில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது பேசிய குஷ்பு, பிரதமர் மோடி, நாட்டை சரியான வழியில் நடத்தி செல்கிறார் என்றும் பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கட்சிக்கு ஒரு நல்ல தலைவரை கூட தேர்ந்தெடுக்க முடியாத காங்கிரசால், நாட்டை எப்படி காப்பாற்ற முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here