குமரியில் தொடர் கனமழை..!

கொல்லங்கோடு, பொழியூர், தேங்காய்பட்டணம் குளச்சல், முட்டம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களும் கடற்படை, கப்பற்படை அறிவிப்பை தொடர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்த பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்கியுள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று தக்கலையில் 87 மிமீ மழையும் பேச்சிபாறை 81.8 மிமீ மழையும், சிற்றார் 78.4 மிமீ மழையும் பதிவாகி உள்ளது. இதனால் தாமிரபரணி, பரலியாறு , கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வாழை, மரச்சினி, காய்கறி, நெல் உட்பட சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் ஏழாயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.