இந்தியாவுக்கு ஆடுவதை விட ஐபிஎல் முக்கியமா ரோஹித்?- வெங்சர்க்கார் காட்டம்

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வாகவில்லை, ஆனால் காயம் குணமடைந்து விட்டதாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடத் தொடங்கியுள்ளார், இந்த விவகாரம் பூதாகாரமாகியுள்ளது.

கங்குலி, ரவிசாஸ்திரி போன்றோர் எச்சரித்தும் ரோஹித் சர்மா சொல் பேச்சுக் கேட்காமல் ஆடி வருகிறார். இந்நிலையில் சேவாக் நேற்று ரவிசாஸ்திரிக்கு ரோஹித் சர்மா காயம் பற்றியெல்லாம் தெரியாமல் இருக்காது ரவி கூறுவதெல்லாம் சும்மா என்று போட்டு உடைத்தார்.

முன்னாள் இந்திய வீரரும் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான வெங்சர்க்கார் கூறும்போது, “ரோஹித் சர்மா விவகாரம் புதிராக உள்ளது. இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மென், ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதி இல்லை என்று இந்திய அணியின் உடற்கூறு மருத்துவர் நிதின் படேல் சில நாட்களுக்கு முன்பு சான்று அளித்தார்.

அவர் சான்று அளித்தவுடன் ரோஹித் சர்மா மும்பை வலைப்பயிற்சியில் ஈடுபட்டதோடு சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராகக் களமிறங்கவும் செய்தார்.

ரோஹித் சர்மாவுக்கு தேசத்தை விட ஐபிஎல் கிரிக்கெட் தான் முக்கியமாகத் தெரிகிறது. இந்திய அணியை விட கிளப் போட்டிகளில் ஆடவே அவரது விருப்பம் போலும். இந்த விஷயத்தில் தலையிட்டு பிசிசிஐ தீர்வு காண வேண்டும்.

இல்லையா, நிதின் படேல் ரோஹித் காயம் குறித்து தவறான தகவல் அளித்தாரா என்பது தெரிய வேண்டும்” என்று கூறினார்.