துணைவேந்தர் சூரப்பாவின் மீதான விசாரணை தொடரும்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்த துணைவேந்தர் பதவிக்கு அப்போது விண்ணப்பித்த 170 பேரில், சூரப்பாவை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தேர்வு செய்திருந்தார்.

இதற்கு அப்போதே பல அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். பல்கலைக்கழக ரீதியாக தொடர்ந்து பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.

சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர் ஏற்கனவே கவர்னரிடம் துணைவேந்தர் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதத்துக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இது ஒரு புறம் இருக்க, புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் நியமித்தார். இந்த தேடுதல் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. அதன்பின்னர், அந்த குழுவினர் புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான பணிகளை தொடங்க உள்ளனர். அதன்படி, இந்த குழு 3 பேரின் பெயரை கவர்னரிடம் பரிந்துரைக்க இருக்கிறது.