‘சாணம் எறி திருவிழா’ என்பது, ஒருவர் மீது ஒருவர் மகிழ்ச்சியோடு பசு சாணத்தை எரிந்து கொண்டாடுவதைக் குறிக்கின்றது. ஸ்பானிஷ் நாட்டிலும் ‘லா டோமாடினோ’ எனப்படும் தக்காளியை ஒருவர் மீது ஒருவர் எறிந்து, விளையாடும் கொண்டாடும் பண்டிகையும் உண்டு. அதே போல தான் தன் ‘கோரேஹப்பா’ என்ற சாணி எறி திருவிழா. இந்த திருவிழா கார்நாடக மாநிலத்தில் உள்ள, சாம்ராஜ் நாகர் மாவட்டத்தைச் சார்ந்த ஒரு சிறிய கிராமமான கும்மத்புரா என்ற ஊரில் கோலாகலமாக நடைபெறுகிறது. விழா நடைபெறும் இடம் கிராமமாக இருந்தாலும், பல ஊர்களில் இருந்தும் இதில் கலந்து கொள்ள மக்கள் அணிவகுத்து வருகிறார்கள்.
இந்த திருவிழா கொண்டாட்டத்தின் முதல் பகுதியாக, கிராமத்தில் பசு மாடுகளை வளர்த்து வருபவர்களிடமிருந்து சாணம் சேகரிக்கப்பட்டு, ஊரின் கோவிலுக்கு பின்புறம் மைதானத்தில் குவித்து வைக்கப்படுகின்றது. திருவிழா நாளன்று, சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை, கிராம மக்கள் ஒன்று திரண்டு, ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி கொண்டாடுகின்றனர். ஊர் மக்கள் மட்டுமின்றி, வெவ்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்த வித்தியாசமான கொண்டாட்டத்திற்கு பின்னணியில் ஒரு கதை இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், சாணம் இருக்கும் குப்பை மேட்டில் ஒரு சிவலிங்கம் இருந்தது, அதன் மேலே ஒரு மாட்டு வண்டி சென்ற போது ரத்தம் பீரிட்டு வந்தது.
இதைக் கேள்வி பட்ட ஊர் மக்கள் அந்த இடத்தை தோண்டிப் பார்த்து சிவலிங்கம் இருந்ததைக் கண்டறிந்தனர். அன்றிரவு ஒரு சிறுவனின் கனவில் வந்த ஈசன், தீபாவளி முடிந்து மூன்றாவது நாள் சாணத்தில் இருந்து எழுந்ததின் நினைவாக, சாணி எறி திருவிழா நடத்த வேண்டும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து, மூதாதையர்களின் வழிகாட்டியாக கும்மத்புராவில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்த 3 ஆம் நாள், இந்த பண்டிகை கொண்டாடப் படுகிறது.
இந்த கதை மட்டுமின்றி, பசு சாணத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன என்று நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. எனவே, இந்த பண்டிகையில் நாங்கள் கலந்து கொள்வது புத்துணர்வு அளிக்கிறது என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதே போன்ற சாணி எறி திருவிழா, தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தாளவாடி என்ற ஊரில் உள்ள கோவிலிலும், விவசாயம் செழிப்பதற்காக கொண்டாடப்படுகிறது.



