வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து..!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்தநிலையில் இன்று காலையில் நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினர். அதில் கூறியிருந்ததாவது:-

மிகவும் பிற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதத்தை ஒதுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழ்நிலையில் இதுபோன்ற அரசாணை பிறப்பிக்கலாமா? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க இயலுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகிறது.

இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு அளித்த பதில்கள் ஏற்றுக்கொள்பவையாக இல்லை. இந்த அரசாணை அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிரானதாக உள்ளது.

எனவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த அரசாணையின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசுப்பணிகளில் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்குமாயின் அவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை – தமிழக அரசு