HBD Y.G.Mahendran: 8,000-க்கும் அதிகமான மேடைகளைக் கண்ட ஒய்.ஜி.மகேந்திரன் பிறந்தநாள் இன்று..!

YG mahendran
ஒய்.ஜி.மகேந்திரன் பிறந்தநாள் இன்று

HBD Y.G.Mahendran: நாடக நடிகர் , திரைப்பட நடிகர் , எழுத்தாளர் , அரசியல்வாதி என பன்முக திறமை கொண்ட ஒய்.ஜி.மகேந்திரன் பிறந்தநாள் இன்று. அவர் கடந்து வந்த பாதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் முதன் முதலில் நாடக கலைகளை அமைத்து , கலைகளை வளர்த்த முன்னோடிகளுள் ஒருவர்தான் ஒய். ஜி. பார்த்தசாரதி. இவரது மகன்தான் மகேந்திரன். கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி , பார்த்த சாரதி – ராஜலட்சுமி தம்பதிகளுக்கு மகனாக பிறந்த ஒய்.ஜி.எம். மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பத்ம சேஷாத்ரி குழும பள்ளிகளின் நிறுவனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற டான் பாஸ்கோ பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ஒய்.ஜி.மகேந்திரன் வேதியல் துறையில் பட்டம் பெற்றவர். அதன் பிறகு எம்பிஏ மேற்படிப்பிலும் பட்டம் பெற்றார். பள்ளி , கல்லூரி நாட்களிலேயே மேடை நாடகங்களில் அசத்தியவர் ஒய்.ஜி.மகேந்திரன். குறிப்பாக நகைச்சுவை கதாபாத்திரத்தின் மீது அவருக்கு அதீத ஈடுபாடாம் .

ஒய்.ஜி.மகேந்திரன் சுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு மதுவந்தி மற்றும் ஹர்ஷவர்தனா என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மதுவந்தி பா.ஜ.க கட்சி பிரமுகராக உள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவும் , ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதாவும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒய்.ஜி.மகேந்திரன் பிறந்த இரண்டே ஆண்டுகளில் அவரது தந்தை பார்த்தசாரதி ‘யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ என்னும் நாடக குழுவை நிறுவினார். இதன் மூலம் சினிமாவிற்கு பல சிறந்த நடிகர்களை உருவாக்கி கொடுத்தனர் . சிறு வயதிலேயே நாடக குழுவோடு ஒன்றி வளர்ந்ததாலோ என்னவோ , ஒய்.ஜி.மகேந்திரனுக்கு நடிப்பின் மீதும் கலைத்துறை மீதும் மிகுந்த ஈடுபாடு வர தொடங்கிவிட்டது. இளம் வயதிலேயே தந்தையின் நாடக குழுவில் முக்கிய பங்காற்றினாராம் ஒய்.ஜி.மேகேந்திரன். இதுவரையில் 100-க்கும் அதிகமான நாடகங்களை அரங்கேற்றி 8,000-க்கும் அதிகமான மேடைகளைக் கண்டிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். அவரின் தனித்துவமான நடிப்பு திறமை அவருக்கான சினிமா அங்கீரத்தையும் பெற்றுத்தந்தது.

கடந்த 1971 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான நவக்கிரகம் என்னும் திரைப்படம் மூலமாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார் ஒய்.ஜி.மகேந்திரன். முதல் படத்திலேயே வித்தியாசமான வசன உச்சரிப்பால் அதிக கவனம் பெற்றார். மகேந்திரன் மூக்கால் பேசும் வித்தியாசமான வசன உச்சரிப்பு , பலருக்கும் பிடித்துப்போனது. சிறு வயதில் இருந்தே நடித்து பழகியவருக்கு நடிப்பு என்பது பழக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் , அவர் தனக்கென தனி பாணியை உருவாக்கினார். அதன் பிறகு கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்தவர், சிறந்த துணை காதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் , காமெடி என பன்முக வேடங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் , சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் என பல ஜாம்பவான்களோடு நடித்து அசத்தியிருந்தார். இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். இறுதியாக சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தார்.இது தவிர 10 க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஒய்.ஜி.மகேந்திரன்.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்