திரைப்படத் துறையில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ‘விஜயலட்சுமி’, தமிழ் திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற தமிழ் திரைப்படத்தில் சிலுக்கு என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அவர், தமிழ் திரைப்படத்துறையில் புகழையும் தேடிக்கொண்டார்.
அன்று வரை ‘விஜயலட்சுமி’ எனப்பட்ட இவர், இத்திரைப்படத்திற்கு பிறகு, ‘சில்க் ஸ்மிதா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பிறகு 1979 ஆம் ஆண்டு “இணையே தேடி” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்பட உலகில் அறிமுகமானார். தன்னுடைய முதல் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக இறுதிவரை அவருக்கு ஒரே மாதிரியான காதாபாத்திரங்கள் மட்டுமே தேடிவந்தது.
கவர்ச்சியானத் தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்த அவர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிப்படங்களில் நடித்து, தென்னிந்தியத் திரைப்பட உலகின் ‘கனவுக்கன்னியாக’ வலம்வந்தார்.
‘மூன்று முகம்’, ‘அமரன்’, ‘சகலகலா வல்லவன்’, போன்ற திரைப்படங்களில் இவருடைய வசீகரமான தோற்றத்தினாலும், கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் கவர்ச்சிப்புயலாக வலம்வந்தார். இவர் நடிப்பில் பல கதாபத்திரத்தினை ஏற்று நடித்திருந்தாலும், நாளிதழ்களும், திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின.
இருப்பினும், ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தாலாட்டு கேட்குதம்மா’, ‘மூன்றாம் பிறை’, ‘லயனம்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்குக் கவர்ச்சி மட்டுமின்றி, அனைத்து விதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என்பதனை நிரூபித்தார்.
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி என மேலும் பல சூழ்நிலைகள் இவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.
இவருடைய மறைவிற்குப் பிறகு “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, மிலன் லூத்ரியா இயக்கத்தில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இத்திரைப்படத்தில், அவரது கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இத்தகையை சிறப்புமிக்க சில்க் ஸ்மிதாவின் அபார நடனத்திறமையும், கண்களின் வசீகரமும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழித் திரைப்பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டுச்சென்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
இதையும் படிங்க :



