திருமங்கலத்தில் காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (34). இவரது மனைவி மாலதி (32). இத்தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். வேதமாணிக்கம், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி, மகளுடன் திருமங்கலம் 18வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் வேதமாணிக்கம் – மாலதி தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு வழக்கம் போல பணியை முடித்து காவல்நிலையத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பினார் வேதமாணிக்கம். அப்போது, மனைவியுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த வேதமாணிக்கம், கோபத்தில் தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் அறையின் கதவை மாலதி தட்டியுள்ளார். எனினும் கதவை அவர் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தப்போது, காவலர் வேதமாணிக்கம் மின் விசிறியில் தூக்கில் கிடந்தார்.
இதனால் மாலதி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, உயிருக்கு போராடிய வேதமாணிக்கத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணியளவில் வேதமாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப பிரச்சனை காரணமாகத்தான் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சக போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:



