மே 1-ம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்

நாடு முழுவதும் மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 45 வயது முதல் 59 வயது வரை 13 சதவீதமும், 60 வயதுக்கு மேல் 19 சதவீதமும் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்றவை தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து 100 சதவீதம் பணியாளருக்கு தடுப்பூசி வழங்க ஊக்குவிப்பதுடன், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து கட்டிட தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்து ஊழியர்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமையில் தடுப்பூசி வழங்க இலவச சிறப்பு  முகாம்கள் மே 1ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.