ஆன்லைனில் சம்பாதிக்க ஆசைப்பட்டு பல லட்சத்தை இழந்த விவசாயி

money
ஜெயித்தால் ரூ.10 ஆயிரம் என 10 ரூபாய் டோக்கன் வழக்கிய 4 அதிமுக பெண்கள் மீது வழக்கு

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மோகன்சந்த் (வயது 55). விவசாயி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘யூடியூப்’ சமூகவலைத்தளத்தில் ஆன்லைன் மூலம் தொழில் செய்வது தொடர்பாக ஒரு வீடியோவை பார்த்தார். அதில் பத்மபிரியா என்ற பெயரில் ஒரு பெண் ஆன்லைன் வேலைவாய்ப்பு குறித்த தகவலை தெரிவித்தார்.

அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்த ‘வாட்ஸ்-அப்’ எண்களில் மோகன்சந்த் தொடர்பு கொண்டார். எதிர்முனையில் அவரை தொடர்பு கொண்ட நபர்கள், ஒரு செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பதிவு செய்து விட்டு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மாதந்தோறும் வருமானம் வரும் என்று கூறினர். அந்த செயலியில் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம் என்றும், ஒவ்வொரு கணக்கிலும் செலுத்தும் பணத்துக்கும் தனித்தனியாக வருமானம் வரும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறினர்.

இதை நம்பிய அவர் 10 கணக்குகள் தொடங்கினார். அந்த கணக்குகளுக்காக அவர், ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 629 செலுத்தினார். அதற்கு சில மாதங்கள் வருமானம் வந்தது. அந்த வகையில் மொத்தம் ரூ.77 ஆயிரத்து 578 வருமானமாக கிடைத்தது. ஆனால், அதன் பிறகு வருமானம் எதுவும் வரவில்லை.

இதனால் சம்பந்தப்பட்ட ‘வாட்ஸ்-அப்’ எண்களில் மோகன்சந்த் தொடர்பு கொண்ட போதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதன்பிறகே அவர் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். ஆன்லைனில் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரூ.4 லட்சத்து 38 ஆயிரத்து 51-ஐ பறிகொடுத்த அவர், இதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட ‘யூடியூப்’ சமூகவலைத்தள வீடியோவில் பத்மபிரியா என்ற பெயரில் பேசிய பெண் யார்? ‘வாட்ஸ்-அப்’ எண்களில் தொடர்பு கொண்ட நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த செயலி மூலம் தமிழகம் முழுவதும் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் மோசடி நபர்களை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Minister Periyasamy: நகைக்கடன் தள்ளுபடியில் மீண்டும் ஒரு வாய்ப்பு