பல கோடி மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

தெற்கு கொல்கத்தாவின் தாகுர்புகுர் பகுதியை சேர்ந்த அருப் நந்தி என்பவர் போலியான ஆவணங்கள், அடையாள அட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன.

அவர் பொதுமக்களிடம் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக்கொண்டு வேலை வாங்கி தருவதாகவும், அரசு சலுகைகளை பெற்றுத்தருவதாகவும், வீடு மற்றும் நிலம் பெற்றுத்தருவதாகவும் ஏராளமானவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்து வந்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாக அவர் பல கோடி ரூபாய் பணத்தை பொதுமக்களிடம் வசூலித்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது பலர் போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைகள் மூலம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து சி.ஐ.டி. போலீசார், அருப் நந்தியை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயன்படுத்துவது போன்ற நீலவண்ண சுழல்விளக்கு பொருத்திய ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான அடையாள அட்டைகள், போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.