Export Madurai malli and Traditional Flowers to Muscat: மதுரை மல்லி உள்ளிட்ட பாரம்பரிய மலர்கள் மஸ்கட் நகருக்கு இன்று ஏற்றுமதி

மதுரை: Export Madurai malli and Traditional Flowers to Muscat. புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லி மற்றும் பாரம்பரிய மலர்கள் மஸ்கட் நகருக்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டன.

புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியாக மதுரை மல்லி மற்றும் நிலக்கோட்டை, திண்டுக்கல், மதுரைக்கு அருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மலர்களான முல்லை, பிச்சிப்பூ, பட்டன் ரோஜா, சாமந்தி, மருக்கொழுந்து, துளசி, தாமரை, பன்னீர் ரோஜா, அல்லி ஆகியவை இன்று மஸ்கட் நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து அனுப்பி வைக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில், ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் பிரவீன் குமார், தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்கள் துறையின் இயக்குநர் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் டாக்டர் அருண் பஜாஜ் மற்றும் அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓமன் நாட்டிற்கான துணைத் தூதர் பிரவீன் குமார், மிகப் பெரிய இறக்குமதி நாடான ஓமனுக்கு வேளாண் மற்றும் இதர உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து திறனை இந்தியா கொண்டிருக்கிறது என்றார். அதே சமயம், ஏற்றுமதி செய்யும் நாடு, தேவைப்படும் தரத்தை பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்காக தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை இயக்குநர் பாராட்டுத் தெரிவித்தார். தரமான பொருட்களை வழங்கும் ஏற்றுமதியாளர்களுக்கு மாநில அரசு சாத்தியமான அனைத்து உதவிகளை செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வின் போது ஓமனின் தலைநகரான மஸ்கட் நகருக்கு தமிழ்நாட்டிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற சுமார் 500 கிலோ மதுரை மல்லி மற்றும் பாரம்பரிய மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.