திமுக அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும்- பழனிசாமி

மக்களை ஏமாற்றாமல், அவர்கள் போராடுவதற்கு முன்பு திமுக அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திமுக ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகளில் ஏமாற்றம் அடைந்த மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, பல்வேறு நிபந்தனைகளை விதிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி சலுகை பலருக்கு கிடைக்கக்கூடாது என்ற அளவுக்கு நிபந்தனைகள் விதிக்க திமுக அரசின் கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்ற அனைவரும் கடன் ரத்தாகும் என மகிழ்ச்சி அடைந்த நிலையில், 2018 ம் ஆண்டு ஏப்., முதல் 2020ம் ஆண்டு வரை பெறப்பட்ட நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. நகைக்கடன் பெற, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தாலும், நிபந்தனைகளால் பலரால் கடன் தள்ளுபடி சலுகை பெற முடியாது.

கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மூலம் இவைகளை தெரிந்து கொண்ட மக்கள் கொதிப்படைந்து போய் உள்ளனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஓட்டு போட்ட தமிழக மக்கள் இனியும் ஏமாற்றாமல், அவர்கள் விழிப்படைந்து போராட்டக் களத்தில் குதிப்பதற்கு முன்பு, அதிர்ஷ்டவசத்தால் ஆட்சிக்கு வந்த இந்த அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும்.கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களையும் மற்றும் 5 பவுன் வரை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றவர்களின் நகைக்கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.