ஒமைக்ரான் கொரோனா குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை

கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், உலக நாடுகளில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம், எந்தெந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது என்பது குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கினர்.

அதேபோல், புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா குறித்தும் அதன் தீவிரத்தன்மை, இந்த வைரசால் இந்தியாவில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் உள்ளிட்டவை பற்றியும் அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய வகை கொரோனா பரவுவதால் முனைப்புடன் செயல்பட வேண்டியதற்கான அவசியம் குறித்து அதிகாரிகளுடன் பேசிய பிரதமர் மோடி, மக்கள் கூடுதல் எச்சரிக்கையாக வேண்டியதற்கான அவசியம் மற்றும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்றுவது குறித்தும் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சர்வதேச நாடுகளிடம் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தல் மற்றும் ஆபத்து அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்த பிரதமர் மோடி, சர்வதேச பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கும் திட்டம் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.