ஸ்டாலின் தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்! !!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

2021 சட்டமன்ற தேர்த்லுக்கு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 8 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர் ராமசாமி உள்பட 8 பேர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம்பெற்றவர்கள் அடுத்த 2 மாத காலத்திற்க்கு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது மாவட்டங்கள் தோறும் உள்ள முக்கிய தொழிற்சங்கங்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆலோசனைகள் மேற்கொள்ள உள்ளனர். இதன் பிறகு அடுத்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்தில் இறுதி தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இன்று நடைபெறும் கூட்டத்தில் திமுக ஏற்கனவே அறிவித்துள்ள நீட் தேர்வு ரத்து, வேளாண் மசோதா எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here