தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு தங்க காசு இலவசம்

திண்டுக்கல்லில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரூ 200க்கு சிறப்பு கூப்பன், மேலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குழுக்கல் முறையில் தங்க காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை , செல்போன் பரிசு அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் 3வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு முதலாம் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகரில் உள்ள 48 வார்டுகளில் 100 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் தடுப்பூசி போடுகின்ற அனைவருக்கும் திண்டுக்கல் நகரில் உள்ள பிரபல துணிக்கடை ரூ 100 ரூபாய்க்கான கூப்பனும் அதேபோல் தனியார் நிறுவனமும் ரூ 100க்கான கூப்பன் வழங்குகின்றனர்.

மேலும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் முதல் தவணை தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் நடத்தி முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு மூன்று நபர்களுக்கும், இரண்டாவது பரிசாக அழகிய செல்போன் 5 நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக பட்டுப்புடவை ஐந்து நபர்களுக்கும், நான்காம் பரிசாக ரூ 2,000 மதிப்புள்ள கிஃப்ட் பேக் 15 நபர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

இதையும் படிங்க: தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு..வீட்டு வாடகையுடன் விடுமுறை !