5 நாட்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு தடை

Thiruchendur Murugan Temple
5 நாட்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு தடை

thiruchendor temple: கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை போன்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட விசேஷங்கள் வருகின்றன.

அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தைப்பூச நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவர். அதிலும் தைப்பூச நாளன்று அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வருவார்கள். ஆனால், இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று ஜன. 14 முதல் 18-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் முருகப்பெருமானுக்கு மாலையணிந்து விரதம் இருந்தவந்த பக்தர்கள் அனைவரும் நேற்று திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் கோயிலில் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை காவல் துறையினர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டும், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களில் வந்த பக்தர்கள், பக்தர்கள் வந்த வாகனங்கள் போன்றவற்றால் திருச்செந்தூர் நகரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: Holiday: ஜனவரி 17ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ரத்து