முதல்வருக்கு கொரோனா உறுதி

arvind kejriwal
முதல்வருக்கு கொரோனா உறுதி

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், ‘டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்காக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். டெல்லியில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 6360. ஆனால் 3 நாட்களுக்கு முன்னர் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2291. கடந்த 3 நாட்களில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இதுவரை 246 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளில் 82 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த சில நாட்களாக டெல்லியில் இதே நிலைமைதான் நீடிக்கிறது. ஆக்சிஜன் தேவை என கொரோனா பாதிக்கப்பட்ட எவரும் மருத்துவமனைக்கு வரவில்லை. டெல்லியில் 37,000 படுக்கைகள் தயாராக உள்ளன.

பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகள் உள்ளதால் அவர் வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதியானது. லேசான அறிகுறிகள் உள்ளது. எனவே, வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.

கடந்த சில நாட்களாக என்னைத் தொடர்பு கொண்டவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெஜ்ரிவாலில் மனைவி சுனிதா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: School Closed: ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகள் மூடல்..!