ஐ.நாவின் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை நான் வரவேற்கிறேன்!

வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் ஐ.நாவின் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை வரவேற்பதாகத் திபெத்திய தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான தலாய் லாமா கூறியுள்ளார்.

ஐ.நாவின் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இன்று அறிவித்துள்ளார்.

இதனை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணு ஆயுதங்களுக்கு எதிரான செயற்பாட்டர்கள் தங்களது ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில், இது தொடர்பாக திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அனைத்து அணு ஆயுதங்களையும் அகற்றுவதை உறுதி செய்யும் ஐ.நா சபையின் அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தம் இப்போது 50 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்ற செய்தியை நான் மனதார வரவேற்கிறேன்.

இதனை உண்மையில் ஓர் வரலாற்று நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.

இந்த முடிவானது, மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு ஏற்றதும், நாடுகளுக்கிடையேயான மோதல்களைத் தீர்ப்பதற்கும் நாகரீக ஏற்பாடுகளைக் கண்டறியும் பாதையின் ஒரு படி.

இந்த ஒப்பந்தம் நம் உலகில் உண்மையான, நீடித்த அமைதியைப் பாதுகாப்பதற்கும் இன்னும் கூடுதலான முயற்சிகளுக்கு பங்களிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

மனித தலைமுறையில் ஒரு புதிய சகாப்தத்தின் வாசலில் நமது தலைமுறை வந்துவிட்டது என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதால், நமது பரந்த, மாறுபட்ட மனித குடும்பம் ஒன்றாக நிம்மதியாக வாழ இனிமேல் கற்றுக்கொள்ளும்.

இந்த ஒப்பந்தத்தை சாத்தியமாக்கிய ஐ.நா.சபை, அதன் உறுப்பு நாடுகளை நான் பாராட்டுகிறேன். இது மனிதகுலத்தின் அடிப்படை ஒற்றுமையை அங்கீகரிக்கும் உலகளாவிய பொறுப்பு மிக்க செயல்.

இந்தச் செயல் நடைமுறைக்கு வந்தால் உலகம் நம் அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக மாறும். அணு ஆயுத வெடிப்பு, சோதனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஒப்பந்தத்தை சமர்ப்பணம் செய்வோம். இந்த ஒப்பந்தம், மொத்த அணு ஆயுதங்களையும் ஒழிக்கும் அர்த்தமுள்ள ஒன்றை முன்னெடுக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட அணு ஆயுத நாடுகள் இந்தத் தடை ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இதுவரை 50 நாடுகள் அணு ஆயுதத் தடைக்கு அளித்திருத்திருப்பது குறிப்பிடத்தக்கது.