Cyclone Jawad: அடுத்த 12 மணிநேரத்தில் புயல் உருவாகும்- வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். இந்த புயல்(Cyclone Jawad) நாளை காலை ஆந்திரா – ஒடிசா கடற்பகுதியில் கரையை கடக்கக்கூடும்.

இந்த புயல் காரணமாக தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

இந்த புயலின் போது காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வங்கக்கடலின் மையமேற்கு, தென்கிழக்கு மற்றும் மையகிழக்கு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் உருவாக உள்ள புயலுக்கு ’ஜாவத்’ என பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: FIR MOVIE: எப்.ஐ.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!