சென்னையில் இதுவரை 4,32,344 பேருக்கு கொரோனா..!

சென்னையை பொறுத்த வரையில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாகவே சதவீத அளவில் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதியன்று தினசரி பாதிப்பு 7.3 சதவீதமாகவே இருந்தது. தினமும் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையை வைத்தும், அதில் கொரோனா பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்படுகிறது என்பதை கணக்கிட்டும் இந்த சதவீத கணக்கை அதிகாரிகள் போட்டுள்ளனர்.

அந்த வகையில் அதிகபட்சமாக 28 சதவீதம் அளவுக்கு நோய்தொற்று உயர்ந்து இருந்தது. பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

மே 11-ந்தேதி அன்று 25 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று அதற்கு அடுத்த நாள் 24 சதவீதமாக குறைந்தது. மே 13-ந்தேதி இது 22.6 சதவீதமானது. நேற்று முன்தினம் இந்த சதவீத கணக்கு மேலும் குறைந்துள்ளது.

மே 14-ந்தேதியன்று 20.1 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அன்று 30,108 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6,538 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

சென்னையில் இதுவரை 4 லட்சத்து 32 ஆயிரத்து 344 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 46 ஆயிரத்து 367 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று 82 பேர் சென்னையில் உயிரிழந்து இருக்கும் நிலையில் கொரோனாவால் இதுவரை 5,703 பேர் பலியாகி இருக்கிறார்கள்.