ஆக்கிரமிப்பை காக்க காலி மனைகளில் வீடு கட்ட யோசனை கூறும் பஞ்., தலைவர்!

ஆக்கிரமிப்பை காக்க காலி மனைகளில் வீடு கட்ட யோசனை கூறும் பஞ்., தலைவர்!
ஆக்கிரமிப்பை காக்க காலி மனைகளில் வீடு கட்ட யோசனை கூறும் பஞ்., தலைவர்!

மணிமங்கலம் ஊராட்சி புஷ்பகிரி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 160 ஏக்கர் அரசு நிலத்தில் உள்ள காலி மனைகளில் உடனடியாக வீடு கட்டினால், அமைச்சர் உதவியுடன் அரசை அணுகி, ஆக்கிரமிப்பை அகற்றுவது தடுக்கப்படும் என, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மணிமங்கலம் ஊராட்சி தலைவர் அய்யப்பன் கூறியுள்ளார்.

அவசரமாக வீடு கட்டினாலும், தேர்தலுக்கு பின் அவற்றை இடித்து அகற்றி, நிலம் மீட்கப்படும்’ என, அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில் உள்ள மணிமங்கலம் ஊராட்சியில் உள்ள புஷ்பகிரி என்ற பகுதியில், அரசுக்கு சொந்தமான 150 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலமும், 10 ஏக்கர் மயான புறம்போக்கு நிலமும் ஆக்கிரமிப்பில் உள்ளன.
மொத்தம், 160 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தில், நுாற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இந்த வீடுகளை அப்புறப்படுத்த, கடந்த 12ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் முயற்சி செய்தனர்.அப்போது, எதிர்ப்பாளர்கள் அதிகளவில் கூடியதாலும், பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும் ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து, மிகப்பெரிய பரப்பளவில் உள்ள இந்த 160 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்படுவது, மிகப்பெரிய விஷயமாக கருதப்படும் என அரசு அதிகாரிகள் பேசி வருகின்றனர்.இதற்கிடையே, ஆக்கிரமிப்பாளர்கள் மத்தியில், மணிமங்கலம் ஊராட்சி தலைவர் அய்யப்பன் பேசியதாவது:

புஷ்பகிரி பகுதியில் வீடுகளை அதிகாரிகள் இடிப்பதற்காக ஆய்வு செய்து வருகின்றனர். மக்களை காப்பாற்றுவதற்காக, எம்.எல்.ஏ., அமைச்சர் மற்றும் முதல்வரிடம் பேசினோம். இதனால், இடிக்கும் திட்டம் கைவிடப்பட்டது. காலி மனை வைத்திருப்போர் உடனடியாக வீடு கட்டுங்கள். ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, சமையல் காஸ் புத்தகம் போன்றவற்றை தயார் செய்து கொள்ளுங்கள். வீடு இருந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். இதுக்கு மேல், ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டம் இருக்காது.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

புஷ்பகிரி பகுதி முழுதும், 160 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அரசு நிலம் மீட்கப்படும். அரசியல் பின்புலத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், இந்த நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூறு போட்டு விற்று உள்ளனர்.

அரசின் முழு ஒத்துழைப்பில், இந்த ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்படும்.மணிமங்கலம் ஊராட்சி தலைவர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவது சரியல்ல.அரசு நிலம் என்பது தெரிந்தும் வீடு கட்ட சொல்கிறார். அவசரமாக அந்த பகுதியில் வீடு கட்டினாலும், அந்த இடம் உறுதியாக மீட்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு ‘4.0’ திட்டம் : இளைஞர்களை மையப்படுத்தி புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது தமிழக அரசு