ஹீரோவாக அறிமுகமாகும் நகைச்சுவை நடிகர் செந்தில்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் என்ற கிராமத்தில் 1951-ம் ஆண்டு பிறந்த நடிகர் செந்தில் தனது 13-வது வயதில் சென்னைக்கு வந்து கிடைத்த வேலைகளை செய்து கொண்டு நாடகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த செந்தில் 80, 90-களில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார்.

கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென ரசிகர் கூட்டம் உருவாகி அது இன்று வரை தொடர்கிறது. கரகாட்டக்காரன் படத்தில் இக்கூட்டணி செய்த வாழைப்பழ காமெடிக்கு சிரிக்காத ஆளில்லை என்று சொல்லலாம். செந்தில் உடன் நகைச்சுவை செய்தாலும் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் கவுண்டமணி.Advertisement

இந்நிலையில் முதல்முறையாக நடிகர் செந்திலும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அடுத்த படத்தில் நடிகர் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் செந்திலுக்கு ஜோடி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அவருடைய எழுபதாவது வயதில் 250 படங்களுக்கு மேல் நடித்த பிறகு அவருக்கு ஹீரோ கதாபாத்திரம் தேடி வந்துள்ளது.

நடிப்பு மட்டுமல்லாது அரசியலில் தன்னை இணைத்துக் கொண்ட செந்தில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவை அடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக அரசியல் பணியாற்றி வருகிறார் செந்தில்.