CM to PM: பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

CM to PM: பாராளுமன்றத்தில் 7 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டி கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்தது.

அதன் அடிப்படையில் டெல்லியில் பிரமாண்டமாக தி.மு.க. அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அண்ணா- கலைஞர் அறிவாலயம் என்று இந்த கட்டிடத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டெல்லி தி.மு.க. அலுவலக கட்டிட திறப்பு விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக தி.மு.க. சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை மாலை இந்த கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க. தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ஏராளமானோர் திரண்டு வந்து மு.க.ஸ்டாலினுக்கு கும்ப மரியாதையும் வழங்கினர்.

இரவில் வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். நேற்று இரவு அங்கு அவர் தங்கினார். இன்று காலை அவரை டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்தனர்.

அவர்களுடன் தி.மு.க. அலுவலக திறப்பு விழா தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டு சென்றார்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் மோடி-மு.க.ஸ்டாலின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார். அதன்பிறகு தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

குறிப்பாக தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியையும் தாமதம் இல்லாமல் தர வேண்டும்

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.

மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு அனுமதி தேவை.

தமிழர்கள் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பில் உயிர்காக்கும் மருந்துகளை வழங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தனது கோரிக்கைகள் அனைத்தையும் அவர் மனுவாக தயாரித்து வைத்திருந்தார். அந்த மனுவை பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதையும் படிங்க: Illegal Relationship: நள்ளிரவில் பெண்ணுக்கு கத்திக்குத்து