NEET 2022: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு

NEET 2022
நீட் தேர்வு விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு

NEET 2022: சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது”, என்று நீட் விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று காலை நீட் விலக்கு தொடர்பான அனைத்து கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டன. இக்கூட்டத்தை அதிமுக, பா.ஜ.க ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ” நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நான் ஆளுநரை சந்தித்தேன். முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினேன். விலக்கு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தபோது, பிரதமரிடம் முறையிட்டேன். இப்போது 143 நாட்கள் எங்கள் மசோதாவை தனது மேசையில் வைத்திருந்த பிறகு, அதை ஆளுநர் திருப்பி அனுப்புள்ளார்” என்று தெரிவித்தார்.

மேலும், அவர், “நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது 8 கோடி மக்களின் உணர்வை மாநில சட்டபேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்”, என்றும் கூறினார்.

இது குறித்து, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ”இந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியபோது அவர் குறிப்பிட்டிருந்த சில காரணங்களை பேரவையின் சிறப்பு அமர்வு கூடி விவாதிக்கும் என்றும் அதன் அடிப்படையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க ஆளுநர் கேட்டுக் கொள்ளப்படுவார்,” என்றும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரை மீண்டும் கூட்டுவது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவை சபாநாயகர் விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது என்றும், நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Cryptocurrency : 9% உயர்ந்த பிட்காயின், எத்திரியம் !