“கடினமான வேலைகளை செய்து முடிப்பதற்கு ஒரு சோம்பலான மனிதனையே நான் தேடுவேன். ஏனென்றால், அவனால் மட்டுமே அந்த வேலையை செய்துமுடிப்பதற்கு எளிமையான வழியைக் கண்டுபிடிக்க முடியும்” – இப்படிச் சொல்வது உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்ஸ்.
அனைத்துக்கும் ஒரு தினம் வைத்து கொண்டாடும் இந்த உலகம், சோம்பலை மட்டுமா விட்டு வைக்கும்? உலக சோம்பல் தினம் ஆகஸ்ட் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
சோம்பேறிகள் பொதுவாக சொகுசு வாழ்க்கையை விரும்புபவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் எந்தச் சிந்தனையும் இல்லாமல், தூங்குவதிலேயே பாதி நேரத்தைக் கழிப்பார்கள். கனவு காண்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. சோம்பேறித்தனம் என்பது நம் ஆற்றலை மழுங்கடிக்க செய்யும் செயல் என விளக்கம் சொல்கிறார்கள்.
வாரம் முழுவதும் வேலை செய்யும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையில் எந்த வேலையும் செய்யாமல் உண்பது, உறங்குவது என வீட்டிலேயே இருந்துவிடுவார். அதையே ஒருவர் தினமும் செய்தால் “தண்டச்சோறு “, “சோம்பேறி” என்ற பெயர் கிடைக்கும்.
சோம்பல் என்பது ஒரு வியாதியல்ல. சோம்பலை, சில எளிய வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம் மாற்றிவிடலாம்.



