‘அமெரிக்காவிற்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்’ – பிடன்!

பிடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அமெரிக்காவிற்கு ரஷ்யா ‘மிகப்பெரிய அச்சுறுத்தல்’ என்று பிடன் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இரு கட்சிகளும் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிபர் ட்ரம்பிற்கும் ஜோ பிடனுக்கும் இடையே நடைபெற்ற கடைசி விவாத்தின்போது பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இருந்து ஜோ பிடன் 3.5 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளார். மேலும், பிடனின் மகன் ஹண்டர் பிடன் முன்னாள் மாஸ்கோ மேயர் யூரி லுஷ்கோவின் மனைவியுடன் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறார்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாடுகளை சுமத்தியிருந்தார்.

இதனால் தனக்கும் ரஷ்யாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை பிடன் கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு பிடன் அளித்த பேட்டியில், “நமது பாதுகாப்பு, கூட்டணி போன்றவற்றை உடைப்பதில் அமெரிக்காவிற்கு ரஷ்யாதான் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று நான் நினைக்கிறேன்.

ரஷ்யாவைப் போல் சீனாவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நாம் அதை எவ்வாறு கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமையும்” என்றார்.

ரஷ்யாவிடமிருந்து பணம் பெற்றதாக ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த பிடன், “வெளிநாடுகளிடம் இருந்து நான் ஒரு ரூபாயைக் கூட பெற்றதில்லை” என்றார்.

முன்னதாக, இது குறித்து ரஷ்யா அதிபர் புதினிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.