இறுதிகட்ட மருத்துவ சோதனையில் பாரத் பயோடெக் கரோனா தடுப்புமருந்து!

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்புமருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகளை தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் கரோனா பரவலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவருகிறது.

கரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இந்நோய்க்கு சிகிச்சையளிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு தடுப்புமருந்தை உருவாக்க உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கரோனா தடுப்புமருந்தை உருவாக்கிவருகிறது.

இந்நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கோவோக்சின்’ தடுப்புமருந்தின் முதல் இரண்டுகட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன.இந்தியாவில் கோவோக்சின் தடுப்புமருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகளை தொடங்க அனுமதிக்கக்கோரி பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது.

பாரத் பயோடெக் நிறுவனம் சமர்பித்திருந்த முதல் இரண்டுகட்ட மருத்துவ முடிவுகளை பரிசீலனை செய்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகளை தொடங்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு இறுதி அனுமதி அனுமதியளித்துள்ளது.மூன்றாம்கட்ட மருத்துவ சோதனைகள் டெல்லி, மும்பை, பாட்னா, லக்னோ உள்ளிட்ட நாட்டின் 19 முக்கிய நகரங்களில் நடைபெறும் என்றும் இதில் 28 ஆயிரத்து 500 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.