Russia-Ukraine crisis: 5வது நாளாக உக்ரைனை சுற்றிவளைத்து தாக்கும் ரஷ்யா

As-Putins-Invasion-Continues-For-5th-Day
ரஷ்யா

Russia-Ukraine crisis: உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை பிடித்ததாக ரஷிய படை அறிவித்தது. ஆனால் உக்ரைன் படைகள் அந்த நகரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது. முன்னதாக நேற்று குறிப்பிடத்தக்க அம்சம், ஏறத்தாழ 15 லட்சம் பேர் வசிக்கிற அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகருக்குள் ரஷிய படைகள் நுழைந்ததுதான்.

இதுதான் மத்திய உக்ரைனின் மிகப்பெரிய கலாசார, அறிவியல், கல்வி, போக்குவரத்து, தொழில் மையமாக திகழ்கிறது. நேற்று காலை வரை ரஷிய துருப்புகள், கார்கிவ் நகரத்தின் புறநகர்களில் தான் இருந்தன. பிற படைகள் உக்ரைனுக்குள் தீவிர தாக்குதல் தொடுக்க நெருக்கின. ஆனாலும் உக்ரைன் படைகளும் அவற்றை எதிர்ப்பதில் தீவிரம் காட்டின.

கார்கிவ் நகருக்குள் ரஷிய போர் வாகனங்கள் நகர்ந்து செல்வதையும், ரஷிய துருப்புகள் நகருக்குள் சிறுசிறு குழுக்களாக சுற்றித்திரிந்ததையும் வீடியோ காட்சிகள் காட்டின. ஒரு வீடியோவில் குண்டுவீச்சில் சேதம் அடைந்து ரஷிய துருப்புகளால் கைவிடப்பட்ட ரஷிய லகுரக வாகனங்களை ரஷிய துருப்புகள் ஆய்வு செய்ததையும் பார்க்க முடிந்தது.

ரஷிய படைகள், கார்கிவ் நகருக்கு கிழக்கே எரிவாயு குழாயை வெடிக்கச்செய்தன. பெரும் மோதல்கள், தெருச்சண்டைகளுக்கு பின்னர் இந்த நகரை ரஷிய படைகள் வசப்படுத்தி விட்டன என தகவல்கள் வெளிவந்தன. ஆனால் உக்ரைன் படைகள் தளராமல் மீண்டும் போராடி அந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து விட்டன. இதை கார்கிவ் பிராந்திய கவர்னர் உறுதி செய்துள்ளார்.

இத்தனை தீவிர சண்டைக்கு மத்தியிலும் ரஷிய அதிபர் புதின் தனது இறுதி திட்டங்களை வெளியிடவில்லை. அவரது நோக்கம், உக்ரைனை ஆட்சி செய்து வருகிற விளாடிமிர் ஜெலன்ஸ்கி அரசைத் தூக்கியெறிந்து தனது சொந்த ஆட்சியை ஏற்படுத்தி, ஐரோப்பிய வரைபடத்தை மீண்டும் வரைந்து, ரஷியாவின் பனிப்போர் கால செல்வாக்கை புதுப்பித்துவிடலாம் என்று நம்புகிறார் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள் மீதான அழுத்தம், மேற்கில் ருமேனியாவின் எல்லையில் இருந்து கிழக்கில் ரஷியாவின் எல்லை வரை நீண்டு கொண்டிருக்கும் உக்ரைனின் கடற்கரையின் கட்டுப்பாட்டை நோக்கமாக கொண்டிருக்கிறது.

இதனிடையே பெலாரஸ் நாட்டின் ஹோமெல் நகரில் ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு உக்ரைன் சம்மதித்து விட்டது. இதை உக்ரைன் அரசு நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன்படி பெலாரஸ் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒரு குழுவை அனுப்புவதை உறுதி செய்துள்ளது. இதை ரஷியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்திருப்பதாக ரஷிய ஊடகமான ‘ஆர்.டி.நியூஸ்’ தெரிவித்தது.

ரஷிய அதிபரின் உதவியாளரான இந்த விளாடிமிர் மெடின்ஸ்கி இதுபற்றி நிருபர்களிடம் கூறும்போது, “இரு தரப்பும் சமரச பேச்சுவார்த்தைக்கு தீர்மானித்துள்ளன. உக்ரைனியர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்புடன் இது நடக்கும். பயண பாதை 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். உக்ரைனிய பிரதிநிதிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று நிருபர்களிடம் தெரிவித்ததாக ஆர்.டி.நியூஸ் தெரிவித்துள்ளது.

தற்போது 5வது நாளாக போர் நடைபெற்று வரும்நிலையில் அணு ஆயுத தடுப்புப் படையினரும் தயார் நிலையில் இருக்க ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பெலாரஸ் நாட்டின் ஹோமெல் நகரில் இன்று நடைபெற உள்ள பேச்சு வார்த்தையில் போர் நிறுத்தம் உள்ளிட்ட பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Russia-Ukraine crisis Live: Ukraine agrees to hold talks with Russia; Belarus votes to give up non-nuclear status

இதையும் படிங்க: IPL 2022 : CSK-வின் அதிரடி அறிவிப்பு