Hindi imposition: “தமிழணங்கு”.. இந்தி திணிப்பின் பொட்டில் அடித்த ஏ.ஆர். ரஹ்மான்!

ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

Hindi imposition: இந்தி திணிப்புக்கு எதிராக இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானும் உரத்த குரல் கொடுத்துள்ளதால் இந்தி திணிப்புக்கு எதிரான முழக்கம் வலுப்பெற்றுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, இந்தி பேசாத மாநிலங்களும் இனி இந்தி பேச வேண்டும. ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக இந்தியை கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு தென்னிந்தியாவில் மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் அமித் ஷாவைக் கண்டித்துப் பேசி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்திக்கு எதிர்ப்பான முழக்கங்கள் பெருகி வழிகின்றன.

இதையும் படிங்க: கூல்டிரிங்ஸ் குடித்த இளைஞர் மூச்சுத்திணறி மரணம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித் ஷாவின் பேச்சை கடுமையாக கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரும் இந்தித் திணிப்பை கடுமையாக சாடியிருந்தனர்.

பல்துறைப் பிரமுகர்களும் இந்தித் திணிப்புக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்துவும் தன் பங்குக்கு அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து போட்டுள்ள டிவீட்டில்,

வடக்கே வாழப்போன தமிழர்
இந்தி கற்கலாம்
தெற்கே வாழவரும் வடவர்
தமிழ் கற்கலாம்

மொழி என்பது
தேவை சார்ந்ததே தவிர
திணிப்பு சார்ந்ததல்ல

வடமொழி ஆதிக்கத்தால்
நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்

இதற்குமேலும் இந்தியா?
தாங்குமா இந்தியா?

என்று வைரமுத்து தனது பாணியில் இந்தித் திணிப்பைக் கண்டித்து குத்திக் காட்டியுள்ளார். மறுபக்கம் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அதிரடியான ஸ்டில்லைப் போட்டுள்ளார். அது மறைமுகமாக அவர் இந்தித் திணிப்பை எதிர்க்கிறார் என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தமிழணங்கு என்று போட்டுள்ள அந்தப் படத்தில் தமிழ்த் தாய் கையில் வேலுடன் ஆக்ரோஷமாக காட்சி தருகிறார். அந்த வேலின் முனையில் தமிழின் சிறப்பு எழுத்தான “ழ” இடம் பெற்றுள்ளது. தமிழ்த் தாயின் கீழே, பாரதிதாசன் எழுதிய “இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ளது. பார்க்கவே படு ஆக்ரோஷமாக காட்சி தருகிறது இந்த ஓவியம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த டிவீட் தற்போது வைரலாகிறது. இதேபோல மேலும் பல பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராக கடுமையான சொல்லாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Baba Vikram: இயக்குனர் பாபா விக்ரம் காலமானார்