குலாப் புயலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

ஒடிசாவையும் ஆந்திராவையும் புரட்டிப் போட்டுள்ள குலாப் புயல் வலுவிழந்து, மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்த போதிலும் , ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

குலாப் புயலின் (Cyclone Gulab) தாக்கத்தால் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பெய்த மழையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ .5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் நிலைமையை ஆய்வு செய்த முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கான் நிவாரணத் தொகையை அறிவித்தார். “பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்,” என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டவர்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குமாறு அதிகாரிகளை ஜெகன் கேட்டுக் கொண்டார். “தேவைப்படும் இடங்களில் புனர்வாழ்வு மையங்களைத் திறக்கவும்” என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விசாகப்பட்டினத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.

நிலைமை சீரடைந்த பிறகு, மறுவாழ்வு மையங்களிலிருந்து தங்களது குடியிருப்புகளுக்கு செல்லும்போது, தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ஜெகன் விரும்பினார். தண்ணீர் மாசுபட வாய்ப்புள்ளதால் டேங்கர் மூலம் குடிநீர் வழங்கவும், ஜெனரேட்டர்கள் உதவியுடன் குடிநீர் வசதிக்கான ஏற்பாடுகளை செய்யவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் இழப்பை விரைவில் கணக்கிட வேண்டும் எனவும் அதிகாரியிடம் முதலமைச்சர் ஜெகன் தெரிவித்தார். அண்டை மாநிலமான ஒடிசாவில் கனமழை பெய்து வருவதால் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வம்சதாரா மற்றும் நாகவளி நதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களை எச்சரித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி