China Plane Crash: விமான விபத்தில் 132 பேரும் உயிரிழப்பு

all-132-on-crashed-china-eastern-plane-confirmed-dead
விமான விபத்தில் 132 பேரும் உயிரிழப்பு

China Plane Crash: சீனாவில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு சென்ற போது விபத்தில் சிக்கியது. அதில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உட்பட மொத்தம் 132 பேர் பயணித்தனர். குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் ஏற்பட்ட தீ அப்பகுதியில் பரவியது.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினரும், மீட்புக் குழுவினரும் போராடி தீயை அணைத்தனர். அங்கு கிடந்த இடிபாடுகளுக்குள் விமான பாகங்களை கண்டறியும் முயற்சியில் மீட்புக்குழு ஈடுபட்டது. விபத்து ஏற்பட்டு 36 மணி நேரத்திற்கும் மேல் கடந்த நிலையில், விமான விபத்தில் யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

விமானத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டு உள்ளதால் விபத்துக்கான காரணத்தை கண்டறிவது கடினமாக இருக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, விபத்துக்கு உள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை சீன விமானத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் இன்று, ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானத்தில் பயணித்த 132 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விபத்துக்கு உள்ளான விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டி, விபத்து நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: School Student Suicide: ஆசிரியை கண்டித்ததால் ரயில் முன் குதித்த பள்ளி மாணவன்