Erode By Election: பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் தென்னரசு

ஈரோடு: AIADMK candidate Tenarasu has started his election campaign in the Erode East by-election. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.

முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக இடைக்கால செயலாளருமான எடப்பாடி பழனிசாமியால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவுக்கு தற்போது மொத்தமுள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். 145 உறுப்பினர்கள் தென்னரசுவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்தநிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பிய ஆவணங்களை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார்.

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான கடிதத்தை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

இதனடிப்படையில் அதிமுக வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். ஏற்கனவே அதிமுக வின் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில் இரட்டு இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் ஆகியோருடன் மணல் மேடு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். முதலில் அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு அதன் பின்னர் வீதி வீதியாக வாக்கு கேட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதுவரை தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனுவை ஏற்பதற்கான கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளராக தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.