காபூல் விமான நிலையத்தில்டுரோன் தாக்குதல் குறித்து அமெரிக்கா கருத்து

காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களை இலக்காக வைத்து நடத்திய தாக்குதலில், குறிவைத்தவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் , அவர்களை மன்னிக்கவும் மாட்டோம். மறக்கவும் மாட்டோம். தகுந்த பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் பைடன் கூறியிருந்தார். இதன்படி ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே படைகள் மீது அமெரிக்க ராணுவம் டுரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரி பில் அர்பன் கூறுகையில், ஆப்கனின் நன்கர்ஹர் மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. குறிவைத்த இலக்கில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் நிச்சயமாக அப்பாவி மக்கள் பாதிக்கப்படவில்லை எனக்கூறினார்.