Vadivelu Health: மக்கள் ஆசீர்வாதத்தால் நான் நலமுடன் உள்ளேன்- நடிகர் வடிவேலு

Vadivelu
நடிகர் வடிவேலு

Vadivelu Health: கொரோனா பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு, குணமடைந்து வீடு திரும்பினார்.

நடிகர் வடிவேலு ‘நாய்சேகர் ரிட்டன்ஸ்; என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கும் இந்தப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கான இடத்தேர்வுக்காக நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிர்வாகி தமிழ்குமரன் ஆகிய 3 பேரும் லண்டன் சென்றிருந்தனர். அண்மையில் லண்டலிருந்து சென்னை திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கடந்த 23 ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதனைத்தொடர்ந்து நடிகர் வடிவேலுவோடு லண்டன் சென்ற இயக்குநர் சுராஜ்க்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் வடிவேலு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது, நடிகர் வடிவேலு பூரண குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோரொனாவிலிருந்து மீண்டு வந்துள்ள நடிகர் வடிவேலு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், மக்களின் ஆசீர்வாததால் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். தானும், இயக்குநர் சுராஜ், தமிழ் குமரன் ஆகிய 3 பேரும் கடந்த 30 ஆம் தேதியே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும், 3 நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் நலம் விசாரித்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என வடிவேலு தெரிவித்தார். இதனையடுத்து விரைவில் நடிகர் வடிவேலு ‘நாய் சேகர்; ரிட்டன்ஸ் படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Squirrel on rampage: கருணைக் கொலை செய்யப்பட்ட அணில்..!