Chennai High court: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு சட்டம் செல்லும் – சென்னை ஐகோர்ட்டு

சென்னை ஐகோர்ட்டு
சென்னை ஐகோர்ட்டு

Chennai High court: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பு வாதத்தின் போது, தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியும், ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், உள்ஒதுக்கீட்டுக்காக பள்ளிகளை அரசு மற்றும் தனியார் என இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது என்றும் அதன் அடிப்படையில் பின்தங்கிய மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்ட தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தங்களை கவனத்தில் கொள்ள தவறிவிட்டன என்று தனியார் பள்ளி மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல இலவச சீருடை, புத்தகங்கள், காலணி உள்ளிட்டவை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வழங்கப்படுவதாகவும், எனவே தங்களுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தனியார் பள்ளி மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதன் சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசுக்கு கொண்டுவந்துள்ள சட்டம் செல்லும். 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதை 5 ஆண்டுகளுக்கு பின் மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு இந்த உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக அரசு உதவி பெறும் பள்ளிமாணவர்கள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க: