TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் வெளியீடு

TNPSC
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் 4 தேர்வு

TNPSC: குரூப் 1 முதல் குரூப் 4 வரையான தேர்வுகள் மற்றும் கட்டாயத் தமிழ் மொழித்தாளுக்கான திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஆகியவற்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் வெளிமாநிலத்தவர் அதிக அளவில் அரசு வேலைகளில் இணைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையில், தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேரத் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து அவர் ஆட்சிக்கு வந்தபின்னர், அரசு வேலையில் சேரத் தமிழ் மொழி கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது.

அண்மையில் இதற்கான அரசாணை வெளியானது. அதில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) ஆகிய துறைசார் தேர்வு முகமைகளில் தேர்வாக தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான உத்தரவில், தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞா்களே 100 சதவீதம் நியமனம் செய்வதற்கு அரசு உறுதிபூண்டுள்ளதாக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதற்காக போட்டித் தோ்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துத் தோ்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தோ்வாக கட்டாயமாக்கப்படும் என பேரவையில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செயலாளா் சாா்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதன்படி, அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுகளில் தமிழ்மொழித் தோ்வு கட்டாயமாக்கப்படுகிறது. அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் கட்டாயமாகத் தமிழ் மொழித் தோ்வு நடத்தப்படும். தமிழ் மொழித் தகுதித் தோ்வுக்கான பாடத் திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிா்ணயம் செய்யப்படும்.

தமிழ் மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தோ்ச்சி கட்டாயம். தகுதித் தாளில் தோ்ச்சி பெறாதவா்களின் இதர போட்டித் தோ்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகள் முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத் தோ்வு என இரண்டு நிலைகளைக் கொண்டது.

இந்த போட்டித் தோ்வுகளில் தமிழ் மொழி தகுதித் தோ்வானது முதன்மைத் தோ்வுடன் விரித்து எழுதும் வகையில் நடத்தப்படும். முதன்மை எழுத்துத் தோ்வானது, மொழிபெயா்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணா்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம்-கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும்.

இந்தத் தோ்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். தகுதித் தோ்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தோ்வின் இதர போட்டித் தோ்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். குரூப் 3 மற்றும் குரூப் 4 தோ்வுகளில் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளன.

அதில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தோ்வாக அமைக்கப்படும். ஒரு நிலை மட்டுமே கொண்ட தோ்வுகளில் தமிழ்மொழித் தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தோ்வாக நடத்தப்படும். இதிலுள்ள பொது ஆங்கிலத்தாள் நீக்கப்படும். 40 சதவீத மதிப்பெண் தோ்ச்சி பெற்றால் மட்டுமே இதர பகுதிகளுக்கான வினாக்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குரூப் 1 முதல் குரூப் 4 வரையான கட்டாயத் தமிழ் மொழித்தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்புக்கான தரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளைத் தேர்வுக்கு தயாராகுவோர் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல குரூப் 1 முதல் குரூப் 4 வரையான தேர்வுகளுக்கான திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: Cylinder blast: திருச்சி அருகே டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து