கொரோனா தடுப்பூசி போடுவதில் கவனக்குறைவு- கண்காணிப்பில் 20 பேர்

உத்தர பிரதேச மாநிலத்தில் கிராம மக்கள் 20 பேருக்கு முதல் டோஸாக கோவிஷீல்டும், 2-வது டோஸாக கோவோக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்ட கவனக்குறைவு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மருத்துவ ரீதியில் இது மிகப்பெரிய கவனக்குறைவாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அந்த 20 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டால்? என மருத்துவ நிர்வாகம் பயப்படுகிறது. கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மருத்துவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆதாஹி கலன் என்ற கிராமத்தை சேர்த்த 20 பேர் பாத்னி ஆரம்ப சுகாதாரமையத்தில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் டோஸாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த 14-ந்தேதி 2-வது டோஸ் செலுத்த செல்லும்போது கோவேக்சின் தடுப்பூசியை சுகாதார ஊழியர்கள் செலுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சித்தார்த்நகர் தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் சவுத்ரி கூறுகையில் ‘‘மத்திய அரசிடம் இருந்து இதுபோன்று (ஒரு நபருக்கு மாறுபட்ட தடுப்பூசி) எந்தவிதமான வழிகாட்டுதல்களும் வரவில்லை. இது கவனக்குறைவாக ஏற்பட்டது. ஒரு நபர் முதல் டோஸில் எடுத்துக்கொண்ட தடுப்பூசியைத்தான், 2-வது டோஸிலும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. எங்களுடைய சீனியர் அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையில் உள்ளவர்களின் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தவறு செய்திருந்தது தெரியவந்ததும், முறையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்களுடைய குழு சம்பவ இடத்திற்கு சென்று அனைவருடனும் இதுகுறித்து பேசினர். தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படவில்லை. ஒட்டுமொத்த சூழ்நிலையையும் நாங்கள் கண்காணிப்போம்’’ என்றார்.