நிரவ் மோடியின் ஜாமின் மனு 7வது முறையாக தள்ளுபடி

பிரிட்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமின் மனு, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஏழாவது முறையாக, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.மத்திய அரசின் முயற்சியால், கடந்த ஆண்டு, பிரிட்டனின் லண்டனில் கைதான நிரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த ஆண்டு நிரவ் மோடி தரப்பில் நான்கு முறை தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.லண்டன் உயர் நீதிமன்றமும், அவரது இரு மனுக்களை விசாரித்து, ஜாமின் வழங்க மறுத்தது. இந்நிலையில், நிரவ் மோடி தரப்பில் ஏழாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவும், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி ஆனது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றம் சி.பி.ஐ., தரப்பில், பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், நிரவ் மோடிக்கு ஜாமின் மறுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.